Wednesday 2 May 2018

மே தினம்

மே தின வாழ்த்துக்கள் 
மே தினம்


18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது.


இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

இந்தியாவில் மே தினம் 

இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம. சிங்காரவேலர் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.

அனைத்து நாடுகளிலும் மே தினம் 
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ்வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

உலகளாவிய போராட்டங்கள்

பிரான்சில் தொழிலாளர் இயக்கம்

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

ரஷ்யாவில் மே தினம்

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில்

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல்பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 11886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம்பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

சிகாகோ பேரெழுச்சி 

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 211886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

அமேரிக்காவின் கருப்பு தினம் 
நவம்பர் 111887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

Tuesday 24 April 2018

பேரளச்சேரி சுப்ரமணியன் கோவில்

பேரளச்சேரி சுப்ரமணியன் கோவில் 

கண்ணூர் பயணத்தில் அடுத்ததாக நாங்கள் சென்றது 'பேரளச்சேரி சுப்ரமணியன் கோவில்'.



கண்ணூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் கண்ணூர்-கூத்துப்பறம்பு சாலையில் உள்ளது பேரளச்சேரி.


நாங்கள் சென்ற நாள் ஞாயிறு. சற்று கூட்டம் மிகுதி தான்.நாங்கள் தேடி வந்த குளத்தை முதலில் பார்த்து விட்டு கோவிலுக்குள் சென்றோம்.


கூட்டம் மிகுதியாக இருந்தும் மக்கள் வரிசையில் நின்று தரிசனம் காணும் முறை மிகவும் அற்புதம்.

ஒரு நூலகத்திற்குள் சென்ற ஒரு அனுபவம். ஆம்!


மௌனம்!!

அமைதி!!


நம்மை இறைவனிடம் கொண்டு சென்றது.

நின்ற கோலத்தில் காட்சி தரும் சுப்ரமணிய பெருமான் அந்த மக்களுக்கு அருள் வழங்கி கொண்டிருக்கிறார்.

வழிபாடு

நாகதோஷத்திற்கு பரிகாரத்திற்கு  இந்த கோவில் பெயர்பெற்றது.
மேலும் 'சுப்ரமணிய பூஜை' மற்றும் 'முட்டை ஒப்பிக்கல்' என்னும் முட்டை சமர்ப்பணம் செய்யும் வழிபாடும் இங்குள்ளது.

ஆயில்யம், ஷஷ்டி மற்றும் சங்க்ரமம் ஆகிய நாட்கள் இங்கு கூட்டம் அதிகமாக காணலாம்.



சிர (எ) குளம் 

பேரளச்சேரி சுப்ரமணியன் கோவில் குளம் மிக அற்புதமான வடிவில் வெட்டப்பட்ட குளம்.



ஹம்பி குளம் போன்று நான்கு பக்கமும் படிக்கட்டுகளால் அமைக்கப்பெற்ற இந்த குளம் மிக அபூர்வமான ஒன்று.
ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற நகரங்களில் இது போன்ற குளங்களை நாம் அதிகமாக பார்க்கலாம்.

திடம்பு நிருத்தம்

மார்கழி மாதம் 8 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
திருவிழா காலத்தில் நடைபெறும் 'திடம்பு நிருத்தம்' என்னும் சடங்கு இங்கு மட்டும் நடைபெறும் ஒன்றாகும். கோவில் பூசாரி இந்த சடங்கை செய்வார்.

கேரள கோவில்களில் திருவிழா காலங்களில் காணப்பெறும் சாக்யற்கூத்து, ஓட்டந்துள்ளல், பரயன்துள்ளல் போன்ற கலைகள் திருவிழா காலத்தில் இங்கும் காணலாம். மேலும் திருவிழா
வாரம் முழுதும் நடைபெறும் கூடியாட்டம் மக்கள் பலரால் அரங்கேற்றப்படும்.

கூடியாட்டம்

கூடியாட்டம் என்பது சமசுகிருத மொழியில் அரங்கேற்றப்படும் ஒரு நாடக வகைகளுள் ஒன்றாகும்.1500 வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் ஒரு அற்புத கலை இந்த கூடியாட்டம்


நாம் இன்று காணும் கூடியாட்டம் 800 வருடங்களுக்கு முன்னர் பழமையை உடையது.


 'ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் '(UNESCO) உலகின் தலைசிறந்த கலைவடிவங்களுள் ஒன்றாக, பேச்சுவழக்கிலும் வகைப்படுத்தவியலா வரலாற்று தொல்வழக்கானவற்றுள் ஒன்றாகவும் உள்ள செல்வம் (Masterpieces of the Oral and Intangible Heritage of Humanity) என்றும் அறிவித்துள்ளது.

முழுமையான கூடியாட்டம் ஆடி முடிக்க 41 நாட்கள் ஆகுமென சொல்லப்படுகிறது.

பொ.யு 7-ம் நூற்றாண்டு முதலே கூடியாட்டம் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

12- 14-ம் நூற்றாண்டில் அனைத்து கோவில்களிலும் கூடியாட்டம் அரங்கேற்றப்படுகிறது.

15-ம் நூற்றாண்டில் கோவில்களில் கூடியாட்டத்திற்காக கூத்தம்பலங்கள் கட்டுவிக்க ஆரம்பித்தனர்.

முக்கிய வேஷங்கள்
  • பச்சை - ஸ்ரீ ராமன், விபீஷணன், அர்ஜுனன்
  • பழுப்பு - சூத்ரதாரன், முனிகுமாரன்
  • கருத்தத்தாடி - சுக்ரீவன்
  • சிகப்புத்தாடி - வாலி
  • வெள்ளைத்தாடி - அனுமான்
  • கத்தி - ராவணன் 


முத்திரைகள்

கூடியாட்டத்தில் 24 முத்திரைகள் உண்டு.அவை,
  • சம்யுக்த முத்திரை - இரண்டு கைகளும் பயன்படுத்தப்படும்
  • அசம்யுக்த முத்திரை - ஒரு கையால் காட்டப்படும் முத்திரைகள் - எ.கா: விலங்கு, மலர், பெண்
  • மிஷ்ர முத்திரை - எ.கா: மாதா, பிதா, குரு
  • சமான முத்திரை - எ.கா: அண்மை, சேய்மை

ராகங்கள்

கூடியாட்டத்தில் 24 ராகங்கள் உண்டு.

  • இந்தளம்
  • பேடிபஞ்சமம்
  • வீரபஞ்சமம்
  • பின்னபஞ்சமம்
  • முரளீந்தளம்
  • அந்தரி
  • சுவல்பந்தரி
  • வேளாதூளி
  • ஸ்ரீகாமரம்
  • ஆர்த்தன்
  • பௌராளி
  • முண்டன்
  • கைசிகி
  • தர்க்கன்
  • வீரதர்க்கன்
  • துக்ககாந்தாரி
  • கட்டந்தரி
  • தானம்
  • தொண்டு
  • புரநீர்
  • ஸ்ரீகன்னி
  • விமல
  • வராடி

வாத்தியங்கள் 

மிழவு
குழித்தளம்
எடக்க
குருங்குழல்
சங்கு 

பயணம் தொடரும்..!!



Monday 23 April 2018

தொடீக்களம் சிவன் கோவில்

தொடீக்களம் சிவன் கோவில் 

கண்ணூர் பயணத்தின் இன்னொரு முக்கியமான தலம் இந்த தொடீக்களம் சிவன் கோவில்.

கேரள தொல்பொருள் துறையின் கீழ் 1993 முதல் பாதுகாக்கப்பட்ட சின்னமாக உள்ள இக்கோவில், தன்னகத்தே  பல சிறப்பு மிக்க வரலாற்று செய்திகளை கொண்டுள்ளது.


கோவில் :

கருவறையை  சுற்றியுள்ளே சுவர் செம்புரைக்கல்லால் ஆனது. இச்சுவர் முழுதும், இலை தழைகள் கொண்டு உருவாக்கப்பட்ட சாயக்கூட்டுகளால் வரையப்பட்ட சுவர் சித்திரங்கள் மிக அழகியவை.

விமானம் சதுரஸ்ர விமான முறையை சார்ந்தது மேலும் இருத்தள விமானத்தை கொண்டது.


காண்போரை தன்வசம் இழுக்கும் கோவிலின் குளத்தின் அழகு  எங்களையும் கட்டிப்போட்டது.



வரலாற்று சான்றுகள் :

கேரளா விடுதலை போராட்ட வீரர்களில் முதன்மையான மன்னர் பழசி-கேரள வர்மாவின் நண்பரான கண்ணவத்து நம்பியார் என்பவரையும் அப்பெருமகனாரின் 24 வயது மகனையும் ஆங்கிலேயர் இக்கோவில் இருக்கும் இடத்திற்கு 2 கி.மீ வெளியே கண்ணவத்தில் 1801-ல் தூக்கிலிட்டனர்.
பழசி ராஜா சில காலம் இங்கு வந்து தங்கியதாக அறியப்படுகிறது.

திப்புவின் மலபார் படையெடுப்பின் போது இக்கோவில் மிகவும் பாதிப்புக்கு உட்படுத்தப்பட்டது.


சுவர் சித்திரங்கள்:

1. காளி
2. துர்கா
3. சிவன்
4. நடராஜன்
5. சதுரபாஹு விஷ்ணு
6. கண்ணன்
7. சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னர்
 ஆகிய சித்திரம் முதலில் காணலாம்


கோவிலின் தெற்கு சுவரில் கணபதி பூஜை அருகே,
1. ராஜேஸ்வரி
2. அகோரசிவன்
3. மோகினி
4. தக்ஷிணாமூர்த்தி ஆகியனவும்,

ருக்மிணி கல்யாணத்தின் 19 சித்திரங்களும் காணலாம்.


1. புராண மன்னரான பீஷ்மகனும் அவனது மனைவியும்
2. கிருஷ்ணன்
3. பலபத்ரன்
4. ருக்மிணியின் காதலை கிருஷ்ணனுக்கு தெரிவிக்கும் ஆள்
5. ருக்மிணியை தேரில் ஏற்றி செல்லும் கிருஷ்ணன் மற்றும் பலபத்ரன்
6. கிருஷ்ணன் மற்றும் பீஷ்மகன் ஆகியோரின் போர்
ஆகிய சிற்பங்களும் நம்மை மெய்மறக்க வைக்கும்

தெற்கில்,
பார்வதியின் மடியில் இருக்கும் கணபதி
சைவசரஸ்வதி
அதி சங்கரர் ஆகியோரின் சித்திரங்களும் தரிசிக்கலாம்.


கண்ணவத்து சங்கரன் நம்பியார்:

கண்ணவத்து நம்பியாரின் காலம் 1760 முதல் 1806 வரை அறியப்படுகிறது.
பழசி மன்னரின் முதன் அமைச்சராக இருந்த நம்பியார் கண்ணவம் என்னும் ஊரில் வாழ்ந்தவர்(2 கி.மீ தொடீக்களம் கோவிலிலிருந்து).

நம்பியாரின் வீரத்தையும், வலிமையையும் கண்ட பழசி ராஜா அவரை தன் முதன்மந்திரியாக அமர்த்தினார்.

ஆங்கிலேய யுத்தம்:

பழசி ராஜா ஆங்கிலேய படைக்கு எதிராக தொடுத்த போரில் கண்ணவத்து நம்பியார் மற்றும் கைத்தேரி அம்பு ஆகியோரின் பங்கு அளப்பரியது.

பழசியின் 1797 மற்றும் 1800 களில் நடைபெற்ற போரில் நம்பியாரின் படைகள் பழசி ராஜாவிற்கு பெரும் உதவி புரிந்தது.
1801-ல் ஆகஸ்ட் 4 ஆங்கிலேயர் கண்ணவத்து நம்பியாருக்கு மரண தண்டனை விதித்தது, எனினும் கண்ணவைத்து நம்பியாரும் பழசி ராஜாவும் தலைமறைவாயினர்.

துரோகம்:

வீரம் தோற்கடிக்கப்படுவது என்றும் துரோகத்தின் முன்னரே.

ஆம் கண்ணவத்து சங்கரன் நம்பியாரும் அப்பெருமகனாரின் 24 வயது மகனும் 1801-ல் நவம்பர் 27 அன்று குட்டியாடி என்னும் ஊரில் இருக்கும் போது, ஒரு துரோகியால் ஆங்கிலேயருக்கு செய்தி அனுப்பப்பட்டு கண்ணவத்து நம்பியார் பரங்கிகளின் படையால் கைதுசெய்யப்பட்டு, கண்ணவத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கேயே இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

தூக்கு மேடை செல்லும் நேரம் ஆங்கிலேய படையால் தரப்பட்ட வாய்ப்பு, 'பழசிராஜாவை காட்டி கொடுத்தால் உங்களை விடுவிக்கிறோம்' என்பதை நிராகரித்து நட்பிற்கும் தன மன்னருக்கும் இந்த நாட்டிற்காகவும் உயிர்துறந்தார் அந்த வீரமிகு பெருமகனார்.

இன்றும் அவர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் 'குருதிக்களம்' என அறியப்படுகிறது.



பயணம் தொடரும்..!!

Sunday 21 January 2018

தளிப்பறம்பா இராஜராஜேஸ்வரம் கோவில்

கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தில் ளிப்பறம்பாவில் அமைந்துள்ளது இராஜராஜேஸ்வரம் கோவில்.




கண்ணூர் பயணத்தின் மிக முக்கிய கோவில்களில் முதன்மையான கோவில், இராஜராஜேஸ்வரம் கோவிலுக்கு மாலை 4.30க்கு வந்து சேர்ந்தோம்.

எங்களை வரவேற்ற புதிய வாயில் எங்களுக்குள் கொணர்ந்த சந்தேகம் தீர வெறும் 2 அடி நடக்க வேண்டியிருந்தது.
தற்கால வாயிலின் உள்ளே 12-ம் நூற்றாண்டின் மதில்சுவர் இன்னும் பெருமையுடன் நின்றுகொண்டிருக்கிறது.
டிப்புவின் வேட்டைக்கு மிச்சம் நான் மட்டுமே என்று கூறாமல் கூறுகிறது இந்த மதில்சுவர்.

பலிபீடத்திற்கு முன் நின்றிருந்த கூட்டம் எங்களை சற்று நேரம் அங்கேயே நிற்க வைத்தது. பிறகு அருகே இருந்தவரிடம் கேட்டு சட்டையை கழற்றி வைத்து உள்ளே சென்றோம்.

ஏன் அங்கே கூட்டம்?

தளிப்பறம்பா - வரலாறு:

பெருஞ்செல்லூர், பெருந்த்ரிக்கோவில், தளிப்பறம்பு கோவில் என வரலாற்றில் அழைக்கப்படும் இராஜராஜேஸ்வரம் கோவில், பரசுராமரால் கட்டிமுடிக்கப்பட்டது என வரலாறு. தமிழ் நூல் பதிற்றுப்பத்து கூறும் சேரமான் பெருமாள் ஆண்ட பெரும்செல்லூர் இதுவே.
பரசுராமர் சேர நாட்டில் உருவாகின 108 சிவாலயங்களில், சிறப்பு வாய்ந்த துவாதச சிவாலயங்களில் (12) இதுவுமொன்று.



துவாதச சிவாலயங்கள்:
  1. கோகர்ணம் மகாபலேஸ்வரர் கோவில் 
  2. தளிபரம்பா ரஜராஜேஸ்வரம் கோவில் 
  3. கொட்டியூர் பெருமாள் கோவில் 
  4. திருச்சூர் வடக்குந்நாதர் கோவில் 
  5. பெறுவனம் மகாதேவ கோவில் 
  6. திருவஞ்சிக்குளம் கோவில் 
  7. வைக்கம் மகாதேவ கோவில் 
  8. ஏட்டுமானூர் மகாதேவ கோவில் 
  9. கடுத்துருத்தி மகாதேவ கோவில் 
  10. செங்கணூர் மகாதேவ கோவில் 
  11. கண்டியூர் மகாதேவ கோவில் 
  12. சுசீந்திரம் கோவில்
சாமூதிரி மன்னர் சிறந்த ராஜராஜேஸ்வரர் பெருமானின் பக்தராக இருந்தார் என்றும் பிறகு, அந்த இறைவனிடம் கலந்தார் எனவும் அதன் பொருட்டே இன்றும் சாமூதிரி வம்ச பெரியவர் இறந்தால் அந்த செய்தி, கோவிலுக்கு கூறப்பட்டு இறைவன் ஒருநாள் துக்கம் அனுசரிப்பதாக கூறுகின்றனர்.

களிமண் கற்களால் செய்யப்பட்ட கோவிலில், பலிபீடம் க்ரானைட் கல்லால் ஆனது.

இந்த பலிபீடம், சோழர் கால கட்டுமானமாக தெரிகிறது. ராஜேந்திர சோழனின் காலத்து சீரமைப்பு பணி இங்கே மூலவர் மற்றும் நாலம்பலத்தில் அதிகமாக காணக்கிடைக்கிறது.



மமூஷிக வம்ச இளவரசன், வலபாவின் ஆணைக்கிணங்க 11-ம் நூற்றாண்டில் பல சீரமைப்பு பணிகள் நடந்துள்ளது. இதற்கு முன், கோவில் மிகவும் மோசமாக இருந்தது என மூஷிக வம்ச மன்னர்கள் கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது.

பொ.யு 1524-ல் கோவில் குளம் முழுமையாக கட்டமைக்கப்பட்டதிற்கு கல்வெட்டு சான்று அந்த குளத்தில் அருகே நமக்கு கிடைக்கிறது.
திப்பு சுல்தான் காலத்தில், இந்த கோவில் அவரால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த காலத்தில் மிகவும் பெரியதாக இருந்த வாயிற்கோபுரம் திப்புவால் முழுமையாக உடைக்கப்பட்டது.

பலிபீடம் அருகே கூட்டம்:




தளியில் பகல் நேரம் ஆண்கள் மட்டுமே நாலம்பலத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.அத்தாழ(இரவு) பூஜை முடிந்த பிறகே பெண்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பள்ளியறை பூஜையின் சமயம் சிவனும் பார்வதியும் மிகவும் சாந்த ரூபமாக இருப்பதால், இச்சமயம் மட்டுமே பெண்களுக்கு அனுமதி. மற்ற சமயங்களில் பெண்கள் பலிபீடத்திற்கு முன் மட்டுமே செல்ல அனுமதிக்கின்றனர்.

மூஷிக வம்சம்:

மூஷிக வம்ச மன்னர்கள் இந்த ராஜராஜேஸ்வரரின் பக்தராக இருந்ததால் பல நிவந்தங்கள் அளித்துள்ளனர்.எழிமலை, பூழிநாடு, கோலத்துநாடு ஆகிய தேசங்களை ஆண்ட மன்னர் வம்சமே மூஷிக ராஜ வம்சம். மூஷிக வம்சத்தை பற்றி தமிழ் சங்க காலந் தொட்டே நாம் அறியப்படுகிறோம்.
ஏழுமலை நன்னன் என்பான் இந்த மூஷிக மன்னர்களில் மிகவும் போற்றப்பட்டவன். இவன் கூடலூர், கோவை வரை தனது அதிகாரத்தை நீட்டித்திருந்தான்.சங்க இலக்கியங்களில், பரணர் கூறும் நன்னன் இவனே. பொ.யு. முன் 100-ல் வாழ்ந்த கிரேக்க பயணியான ஸ்ட்ராபோ, அவருடைய நூலில் மூஷிக வம்சத்தை பற்றி கூறியுள்ளார். கிரேக்க புவியியலாளரான பிடோலோமி, நன்னனின் மூஷிக வம்சத்தின் தாய், ஆய் வம்சம் என கூறியுள்ளார்.

கூடியாட்டாம்:

தளிபறம்பா கோவில் கூடியாட்டம் மட்டும் சாக்கியர் கூத்து கலைகளுக்கு சிறப்பு வாய்ந்தது.
மாணி குடும்பம் மட்டுமே இங்கே கூடியட்டம் செய்ய அனுமதி உள்ளது. பல வருடங்களாக, நாட்யாச்சார்ய விதூஷகரத்னம் பத்மஸ்ரீ மாதவ சாக்கியர் இங்கே தனது, சாக்கியர் கூத்தை நடத்தி வருகிறார். அவருக்கு விதூஷகரத்னம் என்னும் பட்டம் இங்கேதான் தரப்பட்டது.
'வீரஷரிங்ஹல- தங்க காப்பு' இந்த கோவிலில் இருந்து தரப்படும் சிறந்த பட்டம், இறுதியாக மாதவ சாக்கியார் வாங்கினார்.


தளிபறம்பா கோவில் தந்து பெருமையை 1000 வருடங்களுக்கு மேலாகவும் நமக்கு கூறிக்கொண்டு வருகிறது.

பயணம் தொடரும்!!




Tuesday 9 January 2018

அரைக்கல் அருங்காட்சியகம்

அரைக்கல் அருங்காட்சியகம் 

கேரளாவில் வாழ்ந்து வந்த ஒரே முஸ்லீம் மன்னர் பரம்பரை, கண்ணனூர் மற்றும் லட்சதீபு சுல்தான்கள்  என்று அறியப்பட்ட அரைக்கல் ராஜவம்சம்.



கண்ணூர் கோட்டை பார்த்த பின்புதான் அருகே அமைந்துள்ள அரைக்கல் அருங்காட்சியகத்தை காண சென்றோம்.
இந்த அருங்காட்சியகம் அரைக்கல்கட்டு (அரைக்கல் அரண்மனையின்) ஒரு பகுதியாகும். அரண்மனையின் தர்பார் மண்டபம், கேரள அரசால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு 2005 ஜூலை முதல் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்டாலும், அரைக்கல்கட்டு இன்றும் அரைக்கல் அரசக் குடும்பத்திடமே உள்ளது. மலபாரின் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த அரைக்கல் குடும்பத்தின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் கேரளா மாநில அரசு, ஆர்வம் காட்டியுள்ளனர்.

அரைக்கல் ராஜவம்சம்:

அலி ராஜா அலி (1545-1591)
அலி ராஜா அபூபக்கர்-I (1591-1607)
அலி ராஜா அபூபக்கர்-II (1607-1610)
அலி ராஜா முஹமது அலி-I (1610-1647)
அலி ராஜா முஹமது அலி-II (1647-1655)
அலி ராஜா கமால் (1655-1656)
அலி ராஜா முஹமது அலி-III (1656–1691)
அலி ராஜா அலி-II (1691–1704)
அலி ராஜா குஞ்சி அம்சா-I (1704–1720)
அலி ராஜா முஹமது அலி-IV (1720–1728)
அலி ராஜா பீபீ ஹர்ராபிச்சி கடவுபே (1728–1732)
அலி ராஜா பீபீ ஜுனுமாபீ-I (1732–1745)
அலி ராஜா குஞ்சி அம்சா-II (1745–1777)
அலி ராஜா பீபீ ஜுனுமாபீ-II (1777–1819)

தோற்றம்:

கோலத்திரி மன்னரின் அமைச்சரில் இருந்த, 'அரையன் குளங்கர நாயர்' என்பான் இஸ்லாம் மதத்தை தழுவி 'முஹம்மது அலி' என மாறினார் என்றும் பின் கோலத்திரி இளவரசி ஒருவரை காதலித்து கோலத்திரி மன்னரின் சம்மதத்துடன் மணந்தார் என்றும் இந்த மண உறவே அரைக்கல் வம்சத்தின் துவக்கம் என்றும் கோலத்திரி வம்சத்தில் ஒரு பிரிவினர் முஸ்லீம் மதத்தை தழுவியதே அரைக்கல் வம்சத்தின் துவக்கம் என்றும் இரு வேறுபட்ட கருத்து இருந்து வருகிறது.

அரைக்கல் குடும்பத்தை பொருத்தவரை வணிகமே அவர்களின் முதுகெலும்பு.

யுத்தங்கள்:
போர்ச்சுகீசிய படைகள் 1553யில் அலியின் படைகளை தோற்கடித்து லட்சதீபை கையகப்படுத்தினாலும் அடுத்து சில வருடங்களுக்குள் அதை அலியின் படை மீட்டெடுத்தனர். இந்த போரைப் பற்றி ஷேக் ஜைனுதீன் தனது, துஹபத்துல் முஜாகிதீன் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அலி அவர்கள், 'பிஜாப்பூர்-எகிப்திய' கடல் படையின் உதவியுடன் போர்ச்சுகீசிய பாடல்கள் எதிர்த்து போரிட்டார்.

ஒரு நூற்றாண்டுகளுக்கு மேலாக நடந்த அரைக்கல் -

போர்ச்சுகீசிய போரே போர்ச்சுகீசிய படைகளுக்கு கேரளாவிலும் இந்தியாவிலும் தனது ஆதிக்கம் செலுத்த முடியாமல் போக காரணம். இருந்தபோதும் இந்த யுத்தத்தால் கண்ணூரின் வளர்ச்சி பெருவாக பாதிக்கப்பட்டு அரைக்கல் வம்சத்தின் வீழ்ச்சிக்கும் காரணமாக மாறியது.
18ம் நூற்றாண்டில் அரைக்கல்:

ஐரோப்பியர்களின் வருகை, கேரளா மன்னர்கள் தங்களின் முன் விரோதத்தை தீர்க்க உபயோகப் படுத்தினர்.இவையே அரைக்கல் மன்னர்கள் மற்ற கேரளா மன்னர்களை எதிர்க்க காரணமானது.

18ம்-நூற்றாண்டில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் தங்களின் வியாபார மையமாக மாஹி மற்றும் தலச்சேரியை மாற்றியிருந்தனர். இந்த மாற்றம் கடல் வியாபாரத்தை மய்யமாக கொண்டு செய்யல்பட்டு வந்திருந்த அரைக்கல் குடும்பத்தை வெகுவாக பாதித்தது. கேரள நாட்டின் மற்ற மன்னர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் ஒரு வசமும், அரைக்கல் குடும்பம் எதிர் வாசமும் நின்று போட்டிபோட்டுக் கொண்டிருந்தனர்.

1766-ல் கோலத்திரி இளைய மன்னர் காப்பு தம்பானும் அலி மன்னரும் ஹைதர் அலியை மலபாருக்கு வருமாறு அழைத்தனர். தனது எல்லையை நீடிக்கும் பொருட்டு, அந்த அழைப்பை ஏற்று ஹைதர் மலபார் வந்தார். அலி மன்னர் தமது இருபதாயிரம் காலாட்படையையும், கப்பல் படையையும் ஹைதர் அலிக்கு உதவிக்கு அளித்தார்.

மலபாரை வெற்றிகொண்ட ஹைதர் அலி சிரைக்கலின் ஆட்சி பொறுப்பை அலிமன்னரிடம் கொடுத்தார். 1774-ல் திருவிதாங்கூரிலிருந்து திரும்பிய கோலத்திரி மன்னர், தான் கப்பம் கட்டிக்கொள்ளலாம் என்றும் தனது நாட்டை தனக்கே தருமாறும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஹைதர் அலி கோலத்திரி மன்னருக்கே சிரைக்கல் நாட்டின் ஆட்சியை வழங்கினார்.

1790-ல் மூன்றாம் மைசூர் யுத்தத்தின் இறுதியில் ஆங்கிலேயர் வசமான மலபார், ஆங்கிலேயரின் ஓய்வூதியம் பெற்று அவர்களின் கீழ்படியும் ஒரு அரச குடும்பமாக மாறியது.


அருங்காட்சியகம்:
2005-ல் 9000000 லட்சம் செலவில் அரைக்கல் கட்டு, கேரள அரசால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.


பயணம் தொடரும்..!!

Monday 8 January 2018

கண்ணூர் கோட்டை

புனித ஆஞ்செலோ கோட்டை என்னும் கண்ணூர் கோட்டை 

நவம்பர்  11 2017, கண்ணூர் பயணத்தின் இரண்டாம் நாள், காலை ஏழுமலை சென்று, பிறகு அங்கிருந்து கண்ணூர் கோட்டை பார்க்க சென்றோம்.



அரபிக்கடலின் கரையில், கடந்த 500 வருடங்களாக தன்னை தழுவும் அலைகளிடம் கூறும் அதன் வரலாற்றை இன்றும், இந்த காலை வேளையிலும் கோட்டை தவறாமல் கூறிக்கொண்டிருக்கிறது.


சனிக்கிழமை கூட்டம் கொஞ்சம் அதிகம் தான்.
பள்ளிக்குழந்தைகள் மற்றும் அவர்களின் ஆசிரியர்கள், மழலைகள், இளைஞர்கள், காதலர்கள், குடும்பங்கள் என கோட்டை சுற்றும் கூட்டம் சற்று மிகுதியே. வெயிலின் தாக்கம் மெதுவாக பரவத்துவங்கிய தருணம் மனதில் இதன் வரலாறும்!!






வரலாறு:

பிரான்சிஸ்கோ டி அல்மீடா என்னும் போர்ச்சுகீசிய அதிகாரி 23/10/1505-ல் கோலத்திரி மன்னரிடம் கோட்டை கட்ட அனுமதி பெற்றார்.

24/10/1505 அன்று லாரென்சோ டி பிரிட்டோவால் அஸ்திவாரம் போடப்பட்டு, 6 நாளுக்குள் மரத்தால் கட்டப்பட்ட கோட்டை 30/05/1505 அன்று கட்டி முடிக்கப்பட்டது. பிறகு 1505-ல் கற்கோட்டை கட்டப்பட்டது.

1507-ல் நடைப்பெற்ற கண்ணனூர் முற்றுகையில் கோட்டை தாக்கப்பட்டது.




கண்ணனூர் முற்றுகை:

1501 ஆம் ஆண்டின் முற்பகுதியில், போர்த்துகீசிய அட்மிரல் பெடரோ அலவாரஸ் கபோல் மற்றும் கோழிக்கோடு சாமூதிரி இடையே போர் துவங்கிய சிறிது காலத்திற்குப் பிறகு, கண்ணூர் கோலத்திரி மன்னர், போர்ச்சுகீசியர்களுக்கு கண்ணூரில் வர்த்தகம் செய்ய அழைத்தார்.

1502 ஆம் ஆண்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன மற்றும் ஒரு கிரீடம் தொழிற்சாலை, 1502 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

1505 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தியர்களின் முதல் போர்ச்சுகீசிய துணைத் தலைவரான டி. பிரான்சிஸ்கோ டி அல்மேடா, புனித ஏஞ்சலோவின் கல் கோட்டை கண்ணனூரில் கட்டினார். 150 பேரின் கோட்டை பாதுகாப்பு படையினராக,

D. லுர்சோ டி பிரிட்டோவின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டனர்.
போர்த்துகீசியக் கூட்டணியை தீவிரமாகத் தொடர்ந்த பழைய கோலதிரி ராஜா 1506 ஆம் ஆண்டில் காலமானார். அடுத்த வாரிசுக்காக விவாதிக்கப்பட்ட நிலையில், கேரளாவின் கரையோரப் பகுதியாக இருந்த கோழிக்கோடு சாமூதிரி, வேட்பாளர்களால் வரிசைப்படுத்த ஒரு நடுவரை நியமித்தார்.


போர்த்துகீசியர்கள் இந்தியக் கப்பலை மூழ்கடித்து, அவர்களைக் கொன்று குவித்து கடலில் தள்ளினர். மேலும் அவர்கள் தங்களது வணிக கோட்பாடுகள் எதையும் பின்பற்றவில்லை.
கோலத்துநாடு அருகில் உள்ள மக்கள் இந்த நிகழ்வால் மிகவும் கோபமடைந்தனர், மேலும் போர்த்துகீசியர்களைத் தாக்க தங்கள் ஆட்சியாளரான கோலத்தரிக்கு கோரிக்கை விடுத்தனர்.


போர்ச்சுகீசிய படைகளுக்கு எதிராக 27 ஏப்ரல் 1507 அன்று, துவங்கிய கண்ணனூர் முற்றுகை நான்கு மாதங்கள் நடைப்பெற்றது.
கோலத்திரியின் 40000 நாயர்களும், சாமுத்ரியின் 21 பீரங்கிகளும் 20000 படைவீரர்களும் கண்ணனூர் மன்னருக்கு துணை வந்தனர்.

லாரென்சோ டி பிரிட்டோவின் துப்பாக்கி ஏந்திய ஆயிரக்கணக்கான ஆண்களைக் கொண்ட பெரும் தாக்குதல்களைத் திசைதிருப்ப முனைந்தது.

இந்த முற்றுகை விரைவில்இக்கட்டான நிலையை அடைந்தது. போர்த்துகீசியம் மெதுவாக பட்டினிக்கு கட்டாயப்படுத்தப்பட்டன.


காஸ்டனஹேடாவின் விரிவான அறிக்கை, இந்த முற்றுகையை பற்றி கூறுகிறது.

ஓணம் திருவிழாவிற்கு முன்னதாக ஒரு பெரிய தாக்குதலை எதிர்த்து இறுதியில் முறியடிக்கப்பட்டது. ஆயினும், அந்தப் படையின் பெரும் பகுதி காயமுற்றது.

ஆகஸ்டு 27 அன்று, டாக்ஸ்டோ ட குன்ஹா, 8 வது ஆர்மடாவின் கீழ் 11 கப்பல்களின் கடற்படை, ஆகஸ்டு 27 அன்று,

போர்த்துகீசிய பீரங்கிகள் சுகுத்திராவிலிருந்து வந்தது. இந்த கப்பற்படை 300 போர்ச்சுகீசிய படையினருடன் தரையிறங்கி, கோட்டையை நிவாரணம் செய்வதை கட்டாயப்படுத்தியது.

போர்த்துகீசியர்களுக்கும் கோலத்திரி ராஜாவுக்கும் இடையே சமாதானப் பேச்சு நடத்தப்பட்டது, போர்ச்சுகீசியர்கள் தொடர்ந்து கண்ணூரில் இருப்பதை உறுதிப்படுத்தினர், மேலும் அதன் சந்தைகளுக்கு அவர்கள் அணுகுவதைத் தொடர்ந்தனர். இந்த நிகழ்வுகள் 1508 ஆம் ஆண்டில் சவுல் போரில் போர்த்துகீசியர்களின் தோல்விக்கு வித்திட்டது.

பங்காளி சண்டை:

1509-ல் பிரான்சிஸ்கோ டி அல்மீடா, அபோன்சோ டி அல்புகர்கே-வை அடுத்த போர்த்துகீசிய கவர்னராக அங்கீகரிக்க மறுத்து, அவரை கைது செய்து கோட்டைக்குள் சிறை வைத்தார்.

அபோன்ஸோ டி அல்புகர்கே ஆறு மாத கால சிறை வாசத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டார், மேலும் அக்டோபர் 1509 இல், போர்த்துக்கல் மார்ஷலின் வருகையில் கவர்னர்`ஆனார்.

1663-ல் டச்சு ஆட்சியாளர்கள் இந்த கோட்டையை கைப்பற்றி, நவீனமயமாகினர். போர்த்துகீசிய கோட்டை கோட்டை பின்னர் அழிக்கப்பட்டது. கோட்டை 1772-ல் அரக்கல் மன்னர் அலிக்கு டச்சு ஆட்சியாளர்கள் விற்றனர்.

1790 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இதை கைப்பற்றியதுடன், 1947 வரை மலபார் நகரில் அதன் தலைமை இராணுவ நிலையமாக பயன்படுத்தியது.

டச்சுக் தளபதியின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் கல்லறை டச்சு கல்வெட்டுகளுடன்.

2015 ஆம் ஆண்டில் கோட்டை வளாகத்திலிருந்து பல கிலோ எடையுள்ள பீரங்கிப் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனம், இவை இராணுவத் தயாரிப்புகளின் ஒரு பகுதியாக புதைக்கப்பட்டதாக நம்புகிறது.


காலை பொழுது ஒரு பெரும் வரலாற்று நினைவுகளுடன் கழிய, மத்திய உணவுக்காக மேலும் நடக்க சென்றோம்...

பயணம் தொடரும்!!


லோகனார்க்காவு பகவதி


லோகனார்க்காவு பகவதி கோவில் 

மாலை 4.30 மணிக்கு வடகரா வில் உள்ள லோகானார்காவு கோவிலை அடைந்தோம்.

கோவில் திறப்பதற்கு இன்னும் சிறிது நேரம் ஆகும் என்பதை அறிந்து, அருகிலுள்ள கோவில் குளத்தில் குளிப்பதற்கு சென்றோம்.

பெயர் காரணம்:

லோகானார்காவு என்பது, லோகமலயார்காவு என்பதன் திரிபாகும்.
லோகமலயார்காவு லோகம்(உலகம்), மல(மலை), ஆறு- காவு(கோவில்)

லோகானார்காவு கோவில் துர்கை அம்மனுக்காக எடுப்பிக்கப்பட்டது. மேலும் இங்கு சிவன் மற்றும் விஷ்ணு பெருமானுக்கும் தனி கோவில்கள் உள்ளது.

வடகேரளாவில் வாழ்ந்து வந்த 'தச்சோளி உதயணன்' என்னும் வரலாற்று வீரன் இந்த லோகானார்காவு பகவதியின் சிறந்த பக்தன் ஆவான்.

இந்த கோவிலானது, வணிகம் செய்து வடகர விறகு வந்த ஆரிய பிராஹ்மணர்கள் எடுப்பித்தது. துர்கை 500 ப்ராஹ்மணர்களுடன் இங்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இன்றும் அந்த குடும்ப மக்களுக்கு கோவிலில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

கேரளா கோவில்களில் அம்மன், மத்தியமம் அல்லது உத்தமத்திலேயே இருக்கும் ஆனால் இங்கு அம்மன் அதியுத்தமத்தில் உள்ளாள்.

கர்பகிருஹ வரிசையில் யாளி வரிசை இங்க காணக்கிடைக்கிறது.

சுவரில் காணப்படும் ஓவியங்கள் அழியும் நிலையில் இருந்தாலும் மிகவும் அழகாகவும்,நேர்த்தியாகவும் உள்ளது.


தச்சோளி உதயணன்:

வரலாற்று களரி வீரன் 'தச்சோளி உதயணன்' லோகானார்காவு பகவதியின் சிறந்த பக்தனாக அறியப்பட்டு வந்தான்.

தச்சோளி மேப்பையில் குஞ்சு உதயணன் என்ற தச்சோளி உதயணன் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். வடக்கன் பாட்டுகள் இவரின் வீரதீர செயல்களை போற்றி வருகிறது.

வடகரயில் உள்ள கடத்தநாட்டில் மேப்பையில் மாணிக்கோத்து வீட்டில், புதுப்பணத்து மூப்பில் வாழுந்நோர் - மாணிக்கோத்து உப்பாட்டியம்மா தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்.

இளமை பருவம் முதலே, 'களரி' யில் மிகவும் நேர்த்தியாக பயின்று வீரத்தின் அடையாளமாக வளர்ந்து வந்தான். எளியவர்களுக்கு நண்பனாகவும், எதிர்த்தவர்களை கருணையற்ற எதிரியாகவும் இருந்தான் எனவும் கோழிக்கோடு சாமுத்ரி மன்னரே உதயணனுக்கு மரியாதை தந்தார் என வடக்கன் பாட்டுகளால் அறிகிறோம்.

மதிலூர் குருக்கள் உதயணனின் குரு ஆவார். கண்டாச்சேரி சாப்பன் இவரின் நண்பராக இருந்தார்.புண்ணோறன் கேளப்பன், புறமாலா நம்பியார், சிண்டன் நம்பியார் போன்ற பலரை களரியில் தலையறுத்தார்.

லோகானார்காவு ஆறாட்டு(நீராட்டு) தினத்தில், கதிரூர் குருக்கள் (உதயணனின் குரு) என்பாரிடம் பிரிந்து போட்டியில் அவரை கொன்று திரும்புகையில் கதிரூர் குருக்களின் நண்பரான பருந்துகள் எம்மல் பணிக்கர், ஏற்பாடு செய்த மாயன் குட்டி என்பவனின் துப்பாக்கிக்கு 32 வயதில் இரையானார்.

கேரள மன்னர்களில் சாக்த வழிபாடு என்னும் சக்தி வழிபாடு இருந்து வந்தது. சக்தி வழிபாட்டில் மனித பாலி மற்றும் விலங்கு பலியும் இருந்து வந்தது. பிறகு காலத்தின் மாற்றத்தால் உயிர் பாலி நிறுத்தப் பட்டு, அதற்கு பதிலாக வாழை மரம் பலியிடப் பட்டது.

மேலும் கள்ளு மட்டும் இறைச்சி க்கு பதில் மோரும் தானியங்களும் படைக்கப்படுகிறது.


லோகானார்காவு ப்ராஹ்மணர்கள் கையில் இருந்து வந்ததால் இது போன்ற சடங்குகள் தொன்று தொட்டே இல்லாமல் இருந்தது.

ரயில் நிலையம் : வடகரை

பேருந்து நிலையம் : வடகரை

வானூர்தி நிலையம் : கோழிக்கோடு


பயணம் தொடரும்!!

குஞ்ஞாலி மரைக்கார் அருங்காட்சியகம்

குஞ்ஞாலி மரைக்கார்

கண்ணணூர் பயணத்தில் அடுத்ததாக நாங்கள் பயணப்பட்டது வடகர என்னும் ஊரில் உள்ள குஞ்ஞாலி மரைக்கார் அருங்காட்சியகத்திற்கு.



குஞ்ஞாலி மரைக்கார் என்பது, 16-ம் நூற்றாண்டில் கோழிக்கோட்டை ஆண்டு வந்த சாமுத்ரீ மன்னரின் முஸ்லீம் கப்பற்படை தளபதிகளுக்கு வழங்கப்பட்ட பதவியாகும்.

வடகேரள வரலாற்றில் தங்களுக்கென ஒரு இடத்தை தக்கவைத்த குஞ்ஞாலி மரைக்கார்கள் நால்வர்.



நான்கு குஞ்ஞாலி மரைக்கார்கள்
  • குட்டி அஹமது அலி - முதலாம் குஞ்ஞாலி மரைக்காரர் 
  • குட்டி போக்கர் அலி - இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காரர் 
  • பாத்து குஞ்ஞாலி - மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காரர் 
  • முகமது அலி - நான்காம் குஞ்ஞாலி மரைக்காரர் 

குஞ்ஞாலி மரைக்கார் - பெயர் காரணம்:

மரக்கலத்தின் நாயகன், கப்பலோட்டுபவன் என்னும் பொருளாக வருவதாய் மரைக்கார் என்று பெயர் வந்தது.

1500-1600 வரை குஞ்ஞாலி மரைக்கார்கள் போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக 26 கப்பற்படை யுத்தங்களில் ஈடுபட்டதாய் வரலாறு கூறுகிறது.

குஞ்ஞாலி மரைக்கார்களின் வம்சாவளி பற்றி பல கதைகள் உலவுகின்றன. அவர்கள் தூத்துக்குடியிலிருந்து வந்தவர் என்றும், கேரள நாட்டில் உள்ள பொன்னானியை சேர்ந்தவர்கள் என்றும், கொச்சியில் இருந்து வந்தவர்கள் என்றும்,மலபாரில் வாழ்ந்திருந்த அரேபிய நாட்டவர்களின் வழிதோன்றல் எனவும் பல கதைகள் உலவுகின்றன.

போர்ச்சுகீசு - மரைக்காரர் யுத்தம்:


முதலாம் மரைக்காரர் :

1525-ல் கேப்டன் மெனிஸின் தலைமையில் போர்ச்சுகீசு படைகள் பொன்னானியில் நடத்திய கலவரமே போர்ச்சுகீசு-மரக்காரர் யுத்தத்தின் ஆரம்பம். மாதங்கள் நீண்ட யுத்தத்தில் முதலாம் மரைக்காரரின் யுத்த யுக்திகளின் முன்னம் போர்ச்சுகீசு படைகள் 1515-ல் தங்களால் கட்டப்பட்ட கோழிக்கோடு கோட்டையை விட்டு தப்பி சென்றனர்.

போர்ச்சுகீசு படைகள் தங்கள் ஆளுமையை இலங்கை மீது செலுத்தினர். கோழிக்கோடு கப்பல்கள் மீது தாக்குதல்கள், கொள்ளைகள் இலங்கையிலிருந்து நடத்திய நடத்திய போர்ச்சுகீசு படைகளை ஒடுக்க சாமுத்ரி,மரைக்காரரின் துணையுடன் இலங்கை சென்றனர். அந்த யுத்தத்தில் வெற்றி போர்ச்சுகீசு படைகளுக்கே இருந்தது. 1538-ல் யுத்த காலத்தில் முதலாம் மரக்காரர் கொல்லப்பட்டார்.

இரண்டாம் மரைக்காரர் :

முதலாம் மரைக்காரரின் மறைவுக்கு பின்னர் 1538-ல் இரண்டாம் மரைக்காரராகிய`குட்டி போக்கர் அலி பதவி ஏற்றார்.

1538 முதல் 1569 வரை இவரின் காலத்தில் நடைப்பெற்ற யுத்தத்தில் போர்ச்சுகீசு படைகள் அதிகம் சேதம் கண்டது.

1564-ல் கண்ணணூரில் போர்ச்சுகீசு கோட்டைக்கு எதிராக`நடந்த கலவரத்தில் ஆலி மன்னரின் படைகளுக்கு இரண்டாம் மரைக்காரர் தங்கள் கப்பற் படையை அளித்து உதவி புரிந்தனர்.

போர்ச்சுகீசு படைகளுக்கு உதவி புரிய கோவாவிலிருந்து வந்திருந்த பௌலோ டி லிமா-வின் படைகள் இரண்டாம் மரைக்காரரின் முன்னர் கீழடங்கினர். தோற்ற படை வீரர்களை திரும்பி செல்ல உத்தரவு பிறப்பித்தார் மரைக்காரர்.

1569-ல் குட்டி போக்கரின் படை மங்கலாபுரம் துறைமுகம் சுற்றி வளைத்து, போர்ச்சுகீசிய பீரங்கி நிலையத்தை தீ வைக்கவும், ஒரு கப்பலை கைவசப்படுத்தவும் செய்தார்.

வெற்றி பெற்று திரும்பும் வழியில் கண்ணூரில் 14 கப்பல்களில் வந்த போர்ச்சுகீசிய படைகளுடன் போரிட வேண்டியதாகி விட்டது.

இந்த யுத்தத்தில் குட்டி போக்கர் கொல்லப் பட்டார்

குஞ்ஞாலி மரைக்கார்கள் நால்வரில் இவரே மிகவும் போற்றப்படுவதற்கு காரணம் இவரின் வீரதீர செயல்களே ஆகும்.

மூன்றாம் மரைக்காரர்:

குட்டி போக்கர் அலியின் மறைவுக்கு பின் பதவி ஏற்ற, இவர் சாமுத்ரியின் படைகளுக்கு அதிநவீன முறைகளை அறிமுகப்படுத்தினார். 1569-ல் போர்ச்சுகீசிய மன்னரால் அனுப்பப்பட்ட, 'டான் மார்ட்டினோ டி மீரான்' தலைமையேற்ற 36 கப்பல்களில் வந்த படைக்கு எதிராக பெற்ற வெற்றி, அவரின் பெருமையை கூறுகிறது.

கோழிக்கோடு கோட்டை பறிபோனதற்கு பிறகு, 1531-ல் 'தானூர்' மன்னரின் உதவியுடன் சாலியத்து கோட்டையின் பணி போர்ச்சுகீசியரால் ஆரம்பிக்க பட்டு 1532-ல் முடிக்கப்பட்டது.

இக்கோட்டைக்கு எதிரான யுத்தத்தில் கரை வழியே வந்த 'நாயர்' படைக்கு கடல் வழியே மூன்றாம் மரக்காரர் உதவி புரிந்தார்.

மரைக்காரர் கோட்டை:

1571-ல் சாமுத்ரியின் ஒப்புதலுக்கு பிறகு துவங்கப்பட்ட கோட்டையின் அணி 1575-ல் முடிந்தது. இந்த பகுதிக்கு கோட்டைக்கல் என பெயரும் இந்த கோட்டையாலே கிடைக்கப்பெற்றது.

வடக்கே இருந்த கோட்டப் புழா என்னும் குட்டியாடி புழா கரையில் கோட்டை எடுப்பிக்கப் பட்டது.

இந்த ஆற்றின் கிழக்கு பக்கம் மிகவும் ஆழமாக இருந்ததால் கப்பல்கள் வருவதற்கு ஏதுவாக இருந்தது. மேற்கு பாகம், ஆறு அரபி கடலில் சேரும் இடம்.

இரிங்கலில் இயற்கையாக இருந்த பாறைகள் கப்பல்களுக்கு முன்னெச்சரிக்கை செய்திகளை அனுப்பப் பயன்படுத்தப் பட்டது.

7 அடி அகலமுள்ள இரட்டை சுவருடன் கூடிய கோட்டைக்கு கரையை ஒட்டி நாற்புறமும் பீரங்கிகள் நிறுத்திய கொத்தளங்கள் இருந்தது.

1594 இறுதியில் கடலில் நடைபெற்ற போரின் பிறகு தரையிறங்கும் போது கால் உடைந்து படுக்கையில் விழுந்த இவர் 1595-ல் மரணமானார்.

நான்காம் மரைக்காரர்:

முன்றாம் மறைக்காரரின் மறைவிற்கு பிறகு வந்த முகமது அலி 1595-ல் கோட்டையில் பதவி ஏற்றார்.

சீனா வரை வணிகத்தில் ஈடுபட்டு, அதில் பிக பெரிய மாற்றத்தை கொண்டுவந்தார். 'கடல் சாம்ராஜ்யம்' ஏற்படுத்தினார் என கூறுகின்றனர்.

இவரின் இந்த வளர்ச்சி சாமுத்ரி மன்னருக்கு கோவத்தை உண்டு பண்ண போர்ச்சுகீசிய படைகளுக்கு போதுமானதாக இருந்தது.

போர்ச்சுகீசிய படைகளுடன் உடன்படிக்கை ஏற்படுத்திய சாமுத்ரி மன்னர், 1597-ல் கோட்டை முற்றுகையிட முடிவு செய்தார்.

1599-ல் நடைபெற்ற முதல் முயற்சி தோல்வி அடைந்தது.

மீண்டும் 1599 டிசம்பர் 15-க்கு முற்றுகையிட்ட படைகளால் கோட்டைக்குள் இருந்த மக்கள் உணவின்றி பாதிக்கப்பட்டனர்.

கோட்டை அவர்களின் பீரங்கிகளுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

இதை உணர்ந்த மரைக்காரர், உயிருடன் விடுவதாக இருந்தால் மன்னரிடம் சரணடைவதாக கூறி,

1600 மார்ச் 16 அன்று சாமுத்ரி மன்னர் முன் மரைக்காரர் சரணடைந்தார்.

நோயாளிகள், காயமடைந்தவர்கள் நால்வர் வரிசையில் வந்தனர்.

பின்னர் ஆயுதமற்ற வீரர்கள், இறுதியில் படை தலைவர்கள் சூழ தனது உடைவாள் தலைகீழாக பிடித்து மரைக்காரர் வந்தார்.

சாமுத்ரி மன்னர் வாள் வாங்குமாறு தன படையிடம் கூறும்போது நடந்த சிறு கலகத்தில், மரைக்காரர் மற்றும் அவரின் உதவியாட்கள் மற்றும் 40 முஸ்லீம் மக்களையும் போர்ச்சுகீசிய படைகள் குற்றவாளிகள் என கூறி பிடித்தனர்.

சமாதான உடன்படிக்கை செய்து, கிடைக்கப்பெற்ற துப்பாக்கிகள், ஆயுதங்கள் போர்ச்சுகீசிய படைகள் மற்றும் சாமுத்ரி மன்னர் படைகள் சமமாக பிரித்து, கோட்டையை முற்றிலுமாக இடித்தனர்.பின், 'சூரிய சந்திரன் உள்ளவரை இங்கு முஸ்லீம் மக்களை வாழ விடுவதில்லை என தங்க பட்டயம் எழுதி கொடுக்கப்பட்டது. மேலும் முஸ்லீம் மக்கள் காணப்பட்டால் அவர்களை கொன்று விட வேண்டும் என்றும் எழுத பட்டது.

கப்பலில் கோவாவிற்கு மரைக்காரர் மற்றும் ஏனைய 40 பேரையும் கொண்டு சென்று ட்ரோங்கோ சிறையில் அடைத்து வைத்தனர். நாள் ஒன்றுக்கு ஒருவர் வீதம் 40 நாள் நாளில் அனைவரையம் கொன்று இறுதியில் மரைக்காரரை மக்கள் முன் தூக்கிலிட்டனர்.

பின்னர் உடலை நான்கு பாகங்களாக வெட்டி பனாஜி கடல் கரையில் இட்டனர். தலை உப்பில் பதப்படுத்தி கண்ணூர் கொண்டு வந்து கடற்கரையில் மூங்கில் தடியில் குத்தி மக்கள் பார்வைக்கு வைத்தனர்.



கோட்டையின் மாதிரி வரைபடம்:  
1976 ஆகஸ்ட் மாதம் 25 அன்று மாநில தொல்லியல் துறை இதை தன வசம் கொண்டு வந்தது. 2004 முதல் அருங்காட்சியகமாக மக்கள் பார்வைக்கு செயல் பட்டு வருகிறது.

குஞ்ஞாலி மரைக்கார்கள், அரபி கடலில் நடத்திய யுத்தத்தை போற்றும் வகையில் இந்திய கப்பல் படை இந்த அருங்காட்சியத்திற்கு முன்னர் ஒரு நினைவு கல் எடுப்பித்துள்ளனர்.


அருங்காட்சியகம் நேரம் - காலை 10 முதல் மாலை 5 வரை.

பயணம் தொடரும்..!!